ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரம் வழங்குவதன் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்களில் வெற்றிகரமான அறுவடையை நாடு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி இயல்பு நிலைக்கு வந்துள்ளது.
பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், தடையில்லா மின்சார விநியோகம், விவசாயிகளுக்கு உரம், சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக நிதி வழங்குதல் என்பவற்றுக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
திடீர் வரிநீக்கம், அரசாங்கத்தின் வருமானம் குறைய காரணமானது. வருமானத்தை அதிகரிப்பதற்காக 2019இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகள் மீள நடைமுறைப்படுத்தப்பட்டன.
2022ஆம் ஆண்டில், நாட்டில் ஏற்பட்ட சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக சுற்றுலாத்துறை பின்னடைந்தது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மிகவும் கடினமான பல பொருளாதார நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.
தற்போது பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படும் கஷ்டங்கள் தொடரும்.
அத்துடன், சீன எக்சிம் வங்கியிடமிருந்து நிதி உறுதிக்கான கடிதம் நேற்றிரவு அரசாங்கத்திற்கு கிடைத்தது. பின்னர் மத்திய வங்கி ஆளுநருடன் ஆலோசித்து, அது குறித்த இணக்க கடிதத்தை அன்றிரவே சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பியுள்ளோம்.
அனைத்து இரு தரப்பு கடன் கொடுநர்களும் நிதியியல் உறுதிபாடுகளை வழங்கியுள்ளனர். அதற்கமைய, இந்த மாத இறுதிக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்க பெறும் என நம்புகிறேன்.
பலதரப்பு மற்றும் வணிகக்கடன்கள்இலங்கையிலிருந்து இரவோடு இரவாக அனுப்பப்பட்ட கடிதம்! உயரும் ரூபாவின் பெறுமதி – ரணில் வெளியிட்ட அறிவிப்பு
இருதரப்பு கடன்கள் தற்போது செலுத்தப்படுவதில்லை. பலதரப்பு மற்றும் வணிகக்கடன்கள் மட்டுமே செலுத்தப்படுகிறன.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியத்துடனான ஒப்பந்தம் முறியுமாயின், வெளிநாடுகள் மற்றும் தனியார் வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த வேண்டி ஏற்படும். 2029 ஆம் ஆண்டு வரை 6 – 7 பில்லியன் கடன் செலுத்த வேண்டியுள்ளது.
எனவே, இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகும். தற்போது, பொருளாதாரத்தை மீட்சிப்பாதைக்கு இட்டுச்செல்கின்றோம்.
கடந்த 7 – 8 மாதங்கள் மிகவும் கடினமானதாக அமைந்தது. வரிச்சுமை அதிகரித்துள்ளதாக தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
குறுகிய காலத்துக்கு இதனை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். இந்த நிலைமைய, மக்களும், தொழிற்சங்கங்களும் புரிந்துகொள்ள வேண்டும். இதனை புறக்கணித்தால் தற்போதையதை விட நிலைமை மிகவும் மோசமாக அமையும்.
கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பதுடன் அமைதியான ஆர்ப்பாட்டங்களும் இடமளிக்கிறோம். அதனை விடுத்து, ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள மூலம் இந்த நடவடிக்கையை குழப்ப நினைப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.
இதேவேளை, தற்போது டொலருக்கு நிகரான ரூபா பெறுமதி உயர்கிறது. இதுவரை நாம் கொடுத்த உழைப்புகளின் பிரதிபலனே இதுவாகும் என குறிப்பிட்டுள்ளார்.