இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், மேற்குகரையின் நப்லஸ் நகரில் ஜித் சந்திப்பில் இஸ்ரேல் ராணுவ சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த பாலஸ்தீனிய ஆயுத கும்பலை சேர்ந்த இளைஞர்கள் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட இஸ்ரேல் படையினர் பதிலடி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும், ஆயுதக்குழுவை சேர்ந்த ஒரு பாலஸ்தீனியர் சரணடைந்தார். இந்த மோதலில் இஸ்ரேல் படையினர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மோதலின்போது உயிரிழந்த 3 பாலஸ்தீனர்களும் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான அல்-அக்சா மாடர்ஸ் பிரிகேட் தெரிவித்துள்ளது.
இந்த ஆயுதக்குழு பாலஸ்தீனிய அதிபர் முகமது அப்பாசின் கட்சியான பஹ்தா கட்சியில் இருந்து பிரிந்து இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதமேந்திய மோதலில் ஈடுபட்டுவரும் ஆயுதக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.