Home இந்தியா தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு

தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு

by Jey

தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கி ஏப்.3ம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல் நாளான நேற்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,225 தேர்வு மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுத இருந்தனர். அதில், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறைகைதிகளும் அடங்குவர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மொழித் தேர்வை 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை எனபது தெரியவந்துள்ளது. இதன்படி, பள்ளி மாணவர்களில் 49,559 பேரும், தனித்தேர்வர்களில் 1,115 பேரும் தேர்வை எழுதவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மேலும், வேலூரில் 2 மாணவர்கள் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாகவும் தமிழக பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் 4 முதல் 5 சதவிகிதம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதாமல் இருப்பது வழக்கமான ஒன்றுதான்.

தேர்வு எழுத வராத மாணவர்கள் குறித்து விசாரிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பரவி வரும் இன்புளுயன்சா காய்ச்சலும் காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழ் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் பெரம்பலூர், குன்னம் பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுக்கான நூலகத்தை பின்பு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் தேர்வு எழுத கல்வி அமைச்சரிடம் பேசி வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் அறிவிப்பு, தேர்வு எழுதாத மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

related posts