பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி தொடந்த வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கும்பகோணத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென அவையில் இருந்து வெளியேறினார்கள்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் வெளியேறிய அவர்கள் தலைமை செயலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து காங். எம்.பி. ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எனது மதம் என்பது உண்மையையும், அகிம்சையையுமே அடிப்படையாகக் கொண்டது;
உண்மையே எனது கடவுள், அகிம்சையே அதை அடையும் வழி” என மகாத்மா காந்தியின் பொன்மொழியைச் சுட்டிக்காட்டி ராகுல்காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.