காஞ்சீபுரம் அருகே குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் படுகாயத்துடன் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காஞ்சீபுரம் நெல்லுகாரத்தெருவை சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரன் (57), மற்றும் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஆலை மேலாளர் வளத்தோட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (26) நரேந்திரன் சகோதரி மகன் சுதர்சன் (தீ விபத்தில் இறந்தவர்) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரன் என்பவரை காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேசில் பிரேம் ஆனந்த் கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தார்.
இந்த சம்பவத்ததையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் துறை அதிகாரி சிவருத்ரய்யா கூறியதாவது:- காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீபுரம் வட்டத்தில் மேல் ஒட்டிவாக்கம், மாகரல், உத்திரமேரூர் வட்டத்தில் விசூர் போன்ற பகுதிகளில் 3 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது.
தற்காலிகமாக மூட உத்தரவு இதில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக, பட்டாசுகள் உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும், தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான நோட்டீஸ் காஞ்சீபுரம், உத்திரமேரூர் தாசில்தார்கள் மூலம் நேரடியாக தொழிற்சாலை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பாதுகாப்பு, வெடிபொருள்கள் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுதல் போன்ற ஆய்வு மேற்கொண்ட பின்னர் பட்டாசு உற்பத்தி பணி தொடங்க அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிதியுதவி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் பூபதி, விஜயா, கங்காதரன், முருகன், தேவி, கவுதம், சசிகலா, கோடீஸ்வரி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் டாக்டர் மா. ஆர்த்தி கலந்து கொண்டு 8 குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் வீதம் நிவாரண நிதியுதவியை வழங்கினர். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உடன் இருந்தார்.