உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
அன்று முதல் சாமி காலை, இரவு என இரு வேளைகளிலும் பவழக்கால் சப்பரம், சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திர்பிரபை, பூத வாகனம், தங்க மயில் வாகனம், நாக வாகனம், வெள்ளி இடப வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை, கைலாசபீட ராவண வாகனம் போன்ற வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அந்த வகையில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலை 63 நாயன்மார்கள் திருவிழாவையொட்டி ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
சிறப்பு மலர் அலங்காரத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாளுடன் எழுந்தருளி முன்னால் செல்ல, 63 நாயன்மார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து புடைச்சூழ பின் தொடர்ந்து வர மேளத்தாளங்கள் இசைக்க, வாத்தியங்கள் முழங்கிட நான்கு ராஜ வீதிகளில் சாமிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.