2023-24 ஆம் நிதியாண்டுக்கான நிதிக் கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தற்போதுள்ள 6.5 என்ற சதவிகிதமே தொடரும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்திய பொருளாதார வளர்ச்சி ஏறுமுகத்தில் உள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் ஜிடிபி எனப்படும், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்றும், பணவீக்க விகிதம் 5.2 ஆக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச பொருளாதார தாக்கம், அமெரிக்க ஃபெடரல் வட்டி உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் போன்ற காரணிகள் குறித்தும், அதன் விளைவுகளைப் பற்றியும் இந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் விவாதித்ததாகவும் கூறினார்.
தற்போது அமெரிக்க டாலர் மதிப்பு சரிவடைந்துள்ளதால், சர்வதேச சந்தைகளில் சுணக்கம் இருந்தாலும், சில பொருளாதார காரணிகள் இந்திய சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது என குறிப்பிட்ட அவர், தற்போதைக்கு ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பில்லை என்றும், தேவைப்படின் அடுத்த நிதிக்கொள்கை கூட்டத்திலோ, அதற்கு முன்போ ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்றும் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டில், மே 2022 முதல் 6 முறை ரெப்போ ரேட் விகிதமானது இரண்டரை சதவிகிதம் உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து, கடனுக்கான தவணை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையானது.
இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் ரெப்பே வட்டி விகிதம் உயராததால் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.