ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜோன்சன் பெர்னாண்டோ உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குற்றவாளிகளையும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களையும் மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு இந்த இரண்டு தீவிரவாதத் தரப்பினர்களே முக்கியமான காரணகர்த்தாக்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று நடத்தப்பட்ட தாக்குதலின் குற்றவாளிகளுக்கு இன்னமும் உரிய தண்டனை வழங்கப்படவில்லை. தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி வேண்டி அலைந்து திரிகின்றார்கள்.
அந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சகல குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும்.
அதேவேளை, ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராகப் போராடிய காலிமுகத்திடல் போராட்டக்காரர்களையும் தூக்கிலிட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு இந்த இரண்டு தீவிரவாதத் தரப்பினர்களே முக்கியமான காரணகர்த்தாக்கள். இவர்கள் சர்வதேச நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டவர்கள்.
அமைதியான – அழகான இலங்கையை இவர்கள்தான் நாசமாக்கினார்கள். இவர்களை மக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டுத் தண்டிக்க வேண்டும்.
அப்போதுதான் நாட்டிலிருந்து தீவிரவாத விஷக்கிருமிகளை முற்றாக ஒழிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.