Home இந்தியா ஓட்டு வீடுகளின் முன்பு அழகு சேர்க்கும் திண்ணை

ஓட்டு வீடுகளின் முன்பு அழகு சேர்க்கும் திண்ணை

by Jey

கிராமங்களில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் முதல் பெரியவர் வரை சற்று இளைப்பார, ஓய்வெடுக்க அனைத்து வீடுகளிலும் திண்ணை இருந்தது. ஓட்டுவீடுகளின் முன்பு அழகு சேர்ப்பதே திண்ணைதான்.

இது காலப்போக்கில் அழிந்து விட்டது. பாரம்பரியத்தின் ஆணிவேராக திகழ்ந்தது வீட்டு திண்ணை வீடுகள். கடந்த காலங்களில் தங்களது வசதிக்கு ஏற்றவாறு சிறிய வீடுகள் கட்டினாலும் முன்புறம் திண்ணை இல்லாமல் கட்டமாட்டார்கள்.

அப்போதெல்லாம் திண்ணைகள் இல்லாத வீடுகளை காண முடியாது. கிராமத்து மக்கள் தோட்டங்களில் வேலை செய்து விட்டு சற்று ஓய்வு எடுக்க திண்ணையை பயன்படுத்தினார்கள்.

குறிப்பாக வெயில் காலங்களில், இரவு நேரத்தில் காற்றோட்டமாக படுத்து உறங்க இந்த திண்ணையை பயன்படுத்தினர்.

பள்ளிக்குழந்தைகள் விடுமுறை நாட்களில், தாயம், பல்லாங்குழி, கேரம், சதுரங்க விளையாட்டு உள்ளிட்ட பல விளையாட்டுகளை சிறுவர், சிறுமியர்கள் இந்த திண்ணையில் அமர்ந்து விளையாடி வந்தனர்.

உறவினர்கள், நண்பர்கள், ஊர் பெரியவர்கள் என வீடு தேடி வருபவர்கள் சந்திக்க கூடிய இடமாகவும் இந்த திண்ணை இருந்தது. கிராம பகுதிகளில் வழிப்போக்கர்களும், வியாபாரிகளும், சற்று இளைப்பாறும் இடமாகவும் திண்ணை பயன்பட்டது.

பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து கொண்டு அனைவரும் ஒன்று கூடி திண்ணைகளில் அமர்ந்து அவரவர் வீடுகளில் நடந்த சம்பவங்களை பேசுவதும் இந்த திண்ணையில் தான்.

கிராமங்களில் அனைவரது வாழ்விலும், இன்பம், துன்பம், கிண்டல், கேளி, நையாண்டி பேசுவது இந்த திண்ணையில் தான்.

related posts