தமிழக சட்டமன்றத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். வயிறு வலியால் அந்த சிறுமி துடித்துள்ளது.
மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. பெற்றோர்கள் அளித்த புகாரை பதிவு செய்து எப்ஐஆர் எதுவும் போடவில்லை. நேற்றைய தினம் இரவு குழந்தையின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
இது குறித்து நான் சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும் போதே நேரலையை நிறுத்தி விட்டனர். வேண்டும் என்றே திட்டமிட்டு நேரலையை நிறுத்துகின்றனர். திட்டமிட்டு செய்கின்றனர். பெண் குழந்தையின் நிலைகுறித்து நான் பேசியதை புறக்கணித்து விட்டனர்.