தற்போது வெப்பமான காலநிலை நிலவுவதால் நோயாளிகள் உட்பட அனைவரும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சூரியன் எமது பிரதேசத்தில் உச்சம் கொடுப்பதால் மத்தியான நேரங்களில் வெளிப்பயணங்களை தவிர்ப்பது நல்லது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15.04.2023) யாழ். போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், போதிய அளவு நீராகாரங்கள் அருந்த வேண்டும். குறிப்பாக ஒருவர் ஒரு நாளைக்கு 2-3 லீட்டர் அளவு நீரை அருந்துதல் வேண்டும். நீர் தன்மையுள்ள பழங்களான வெள்ளரிப்பழம், கெக்கரி போன்றவற்றை உண்ண வேண்டும்.
நமது சூழலில் காணப்படும் நிழல் தரும் மரங்கள் மிக முக்கியமானதாகும். இவற்றை இத் தருணத்தில் நாங்கள் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை கடந்த சில மாதங்களாக நிலவி வந்த மருந்து தட்டுப்பாடு தற்போது பூரணமாக நீங்கி உள்ளது. கண்டிப்பாக கிளினிக் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்ற இன்சுலின் மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவியது.
தற்போது சுகாதார அமைச்சிலிருந்து எமக்கு அந்த மருந்துகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சிறுநீரக நோயாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய மருந்துகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனால் நாங்கள் மருத்துவ சேவையை செவ்வனே செய்யக்கூடியதாக உள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக கோவிட் தொற்றுடைய நோயாளிகள் அன்டிஜன்ட் பரிசோதனை மூலம் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
இன்றுவரை இவ்வாறு ஐந்து நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் சுவாசம் தொடர்பான தொற்றுடன் காணப்படுகின்றனர்.
இந்தத் தொற்றானது சமூகத்தில் பரவலடையாமல் இருப்பதற்கு முகக் கவசம் அணிதல் வேண்டும், சமூக இடைவெளியை பேணுதல் வேண்டும், மக்கள் நெருக்கமாக நடமாடும் இடங்களை தவிர்த்தல் வேண்டும்.