தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு சர்பிங் சங்கம், இந்திய சர்பிங் சம்மேளனம் ஆகியவை இணைந்து இந்தியாவில் முதல் முறைாக சர்வதேச சர்பிங் ஒபன் போட்டி நடத்தப்படுகிறது.
சர்வதேச அலை சறுக்குப் போட்டியான இந்தப் போட்டி மாமல்லபுரத்தில் ஆகஸ்டு 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தியாவில் விளையாட்டு வளர்ச்சியில் தொடர்ந்து தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. பல துறைகளில் வளமான பாரம்பரியத்தை வளர்த்து வருகிறது.
நமது மாநிலம் ஆக்கி, கபடி, கிரிக்கெட், டென்னிஸ், ஸ்குவாஷ், கைப்பந்து, வாள்வீச்சு, சதுரங்கம் போன்றவற்றில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் தனித்துவத்தை உறுதிப்படுத்தி வருகிறது.
சமீப காலங்களில், சர்பிங் விளையாட்டு ஊக்கு விப்பை தமிழ்நாடு முன்னின்று நடத்தி வருகிறது. தலை சிறந்த தேசிய சர்பிங் சம்பியன்கள் மூலம் 2028 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதில் நாடு உறுதியாக உள்ளது.