ஆப்ரிக்க நாடான மாலியில், கடந்தாண்டு ஆகஸ்டில், அதிபராக இருந்த இப்ராஹிம் பவுபாகர் கெய்ட்டா நீக்கப்பட்டு, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
இதற்கு, ஐ.நா., மற்றும் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து, நிரந்தர மக்களாட்சியை அமைக்கும் வரையில், தற்காலிக அரசு அமைக்க ராணுவம் சம்மதித்தது. இதன்படி, அதிபராக பா டாவ் மற்றும் பிரதமராக மொக்டார் உவானே பதவியேற்றனர். ஆட்சியில் ராணுவ பிரதிநிதிகளும் இடம்பெற்றனர்.
இந்நிலையில் அமைச்சரவை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. அதில், ராணுவத்தின் சார்பில் இருந்த உள்துறை மற்றும் ராணுவ அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். இதையடுத்து அதிபர் மற்றும் பிரதமரை ராணுவம் கைது செய்துள்ளது.இதனால் மாலியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, அதிபரையும் பிரதமரையும் பதவி நீக்கம் செய்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.