ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு மோதல் வெடித்தது.
தற்போது, ராணுவம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் குறிப்பிடப்படாத எண்ணிக்கையில் இந்தியர்கள் சூடானில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சூடானின் தலைநகர் கார்ட்டூமில் சண்டை அதிகரித்துள்ளதையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், சூடான் நாட்டில் இந்தியர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் ,பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட குழு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த ஆய்வு கூட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த சந்திப்பில் விமானப்படை தளபதி மார்ஷல் விஆர் சௌதாரி , கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.சூடானுக்கான இந்திய தூதர் பி.எஸ்.முபாரக் கலந்து கொண்டார்.
இந்த ஆலோசனையில் சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்க பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். .