தீ பரவியுள்ள MV X-Press Pearl கப்பலிலிருந்து வெளியேறும் புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.
தீ பரவும் கப்பலிலிருந்து Nitrogen Dioxide வாயு வௌியேறுவதால், அது காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அமில மழை கரையோரங்களில் மாத்திரமன்றி, கரையோரத்தை அண்மித்த பகுதிகளிலும் பெய்யக்கூடும் என அவர் கூறினார்.
இதனால், வீடுகளுக்கு வெளியில் வாகனங்கள் உள்ளிட்ட உலோகப் பொருட்கள் இருக்குமாயின் அவற்றை மூடி வைக்குமாறும் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ளவர்கள் மழையில் நனைவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
இதேவேளை, MV X-Press Pearl கப்பல் கடலில் மூழ்கும் அபாயமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
கப்பலில் தொடர்ந்தும் தீ பரவி வருவதால் கப்பல் கடலில் மூழ்கும் என்பதுடன், அதிலுள்ள எண்ணெய் கடலில் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர், பேராசிரியர் டர்னி பிரதீப்குமார குறிப்பிட்டார்.
இதனிடையே, வத்தளையிலிருந்து மாரவில வரையான கடற்கரை பகுதிகளின் நீர் மாதிரிகளை சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தீ பற்றிய MV X-Press Pearl கப்பலில் இருந்து வீழ்ந்த கொள்கலன்களால் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு நீர் மாதிரிகள் சேகரிக்கப்படுவதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது வரையான அறிக்கைகளின் பிரகாரம், இதுவரை இரசாயன பதார்த்தங்களினால் பாதிப்புகள் ஏற்படவில்லை என நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பாலித்த கித்சிறி குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால், மீனவர்களின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, கடற்றொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் கூறினார்.