இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகள் நேற்று 2 லட்சத்து 8 ஆயிரமாகப் பதிவாகியுள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது. புதன்கிழமை காலை வரை 20,06,62,456 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:
இன்று காலையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டேன். தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அயராது உழைக்கும் நம்முடைய சுகாதாரப் பணியாளர்களுக்கு மிகவும் நன்றி என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். 30 வயதான நடராஜனுக்கு ஆஸ்திரேலிய தொடரின்போதே முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அவா் தொடா்ந்து விளையாடியதால், அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்குக் காயம் பெரிதானது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்குக் கடந்த மாத இறுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் நடராஜன் இடம்பெறவில்லை.