இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை வாசல் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நேற்று மாலை நபர் ஒருவர் சுற்றி திரிந்து உள்ளார்.
திடீரென அவர் அரண்மனைக்குள் பையில் இருந்த நிறைய பொருட்களை தூக்கி, வீசியுள்ளார். அவற்றில் துப்பாக்கி தோட்டாக்களையும் வீசி எறிந்து உள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.
அவரை பெருநகர போலீசார் சுற்றி வளைத்து, கைது செய்தனர். அவரிடம் இருந்த கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்து உள்ளனர்.
வேறு ஏதேனும் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறாரா? என்றும் சோதனை நடந்தது. அவரிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என போலீசார் கூறியுள்ளனர்.
அந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் நிபுணர்களின் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
துப்பாக்கி சூடு எதுவும் நடைபெறவில்லை எனவும், இந்த சம்பவத்தில் அதிகாரிகளுக்கோ, பொதுமக்களுக்கோ காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தலைமை காவல் கண்காணிப்பாளர் ஜோசப் மெக்டொனால்டு தெரிவித்து உள்ளார்.