வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது.
இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை பந்தாடியது. குறிப்பாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புயல் கரையை கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பலத்த சூறாவளி காற்றால் 700 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அதேபோல் மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன.
அங்கும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. புயல் கரையக் கடந்த நிலையில், அங்கு மீட்பு பணிகளை அங்குள்ள நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன.