வியட்நாமில் உள்ள அதிகாரிகள் புதிய கொரோனா வைரஸ் திரிபு கண்டறிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த மாறுபாடு இந்திய மற்றும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொவிட் -19 வகைகளின் கலவை என்றும் அது காற்றில் வேகமாக பரவும் என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வியட்நாம் சுகாதார அமைச்சர், இந்தியா,பிரித்தானியாவில் முதன்முதலில் காணப்பட்ட இரண்டு வகைகளின் சிறப்பியல்புகளை இணைக்கும் புதிய கொரோனா மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளதாக கூறினார்.
மேலும் புதிதாக அடையாளம் காணப்பட்ட மாறுபாட்டின் மரபணு தரவை வியட்நாம் விரைவில் வெளியிடும் என்றும் வியட்நாம் சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது, வியட்நாமில் அறிவிக்கப்பட்ட புதிய வைரஸ் மாறுபாடு குறித்து தாங்கள் இன்னும் மதிப்பாய்வு செய்யவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா தொற்று பரவல் வியட்நாமில் ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து அதிகரிக்க தொடங்கியதை அடுத்து இதுவரை 6,856 நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் B.1.222, B.1.619, D614G, B.1.1.7 என்ற பிரித்தானியா மாறுபாடும் B.1.351, A.23.1 மற்றும் B.1.617.2 வகை இந்திய மாறுபடும் கண்டறியப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.