தமிழ் இனப்படுகொலை நாளை முன்னிட்டு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
போரில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள் காயமடைந்தவர்கள், தப்பியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் நினைவு கூர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் போரின் போது எதிர்நோக்கிய அவலங்களை குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது என்பதற்காகவே கடந்த ஆண்டு கனடிய நாடாளுமன்றில் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாள் அனுஸ்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமாயின் மதம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவம் ஆகியனவற்றின் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டுமென பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
கனடிய தமிழர்கள் நாட்டுக்கு வழங்கிவரும் பங்களிப்பினை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவினை வெளிப்படுத்துமாறு பிரதமர் ட்ரூடோ, கனடிய மக்களிடம் கோரியுள்ளார்.