வடமாகாண புதிய ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (19.05.2023) வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மடுவில் இந்துக்களின் காணியை அபகரித்து கிறிஸ்தவருக்கு தாரை வார்த்த அம்மணியே வெளியேறு, ஊழல்வாதிகளை காப்பாற்றாதே, தமிழினத்தை அழிக்காதே எனும் வாசகம் அடக்கிய பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம், மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
அந்த வகையில் வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இவர் முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா பதவியில் இருப்பதற்கு முன்னர் ஒருதடவை வடக்கு மாகாண ஆளுநர் பதவியை வகித்திருந்தார். ஆனால் இவரது செயற்பாடுகளில் மக்களுக்கு அதிருப்தியே ஏற்பட்டிருந்தது.
அந்த வகையில் புதிதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவியேற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்று இடம்பெற உள்ளதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் பொலிஸார் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.