முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர்களில் ஒருவரான கபில காமினி சிறிசேனவுக்கு சொந்தமான வீட்டில் இருந்த நிலையில், மாணிக்கக்கற்கள் பதிக்கப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க மோதிரம் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலன்நறுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரம், 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள், ஒரு லட்சம் ரூபா பணம் என்பதை வீட்டில் வேலை செய்த நபர் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் நடந்ததாக கூறப்படும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து கபில காமினி சிறிசேன நேற்று பொலன்நறுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தன்னிடம் வேலை செய்து வந்த பெலியத்த கெட்டமான்ன பிரதேசத்தை சேர்ந்த ஊழியர் இந்த கொள்ளையை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கபில காமினி சிறிசேன என்பவர் சமிந்த என்ற பெயரில் பிரபலமான மிகப் பெரிய கல் குவாரிகளின் உரிமையாளரான வர்த்தகர்.
சுகலா ராணி அரசாட்சி செய்த இடம் எனக்கூறப்படும் இடத்தில் இருந்த பண்டைய கால கட்டிடங்களின் எச்சங்கள் காணப்பட்ட பளுதெனிய கற்பாறையை அழித்த கல் குவாரி வர்ததகர்களில் சமிந்தவும் ஒருவர் என அப்போது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.