இங்கிலாந்துடன் இரு டெஸ்டுகளில் விளையாடுவதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நியூசிலாந்துக்குச் சாதகமாக அமையும் என்று பலரும் கூறுவதை இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் மறுத்துள்ளார்.
சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றிய இந்திய அணி, ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றது.
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் ஜூன் 2 முதல் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நியூசிலாந்துக்குச் சாதகமாக அமையும் எனப் பலரும் கூறி வருகிறார்கள். இதனை இந்திய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான கவாஸ்கர் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியினர் சூழலுக்குப் பழகிவிடுவார்கள். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நியூசிலாந்துக்குச் சாதகமாக அமையும் என எதிர்மறை சிந்தனையாளர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் இதில் சில சிக்கல்கள் உள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி தோற்றுவிட்டால் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது அவர்கள் உற்சாகம் குறைந்தவர்களாக இருப்பார்கள். அதேபோல இங்கிலாந்தில் ஜூன் மாதத்தில் நியூசிலாந்தின் முக்கியமான வீரர்களுக்குக் காயங்கள் ஏற்படலாம். பதிலாக, இந்திய அணியினர் உற்சாகத்துடன் புத்துணர்ச்சியுடன் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடுவார்கள். எந்தவொரு கடினமான சூழலையும் எதிர்கொண்டு போராட இந்திய அணி தயாராக உள்ளது. எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திலும் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார்.