Home இலங்கை நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய அஜித் பிரசன்ன

நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய அஜித் பிரசன்ன

by Jey

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் மேஜர் (ஓய்வுபெற்ற) அஜித் பிரசன்னவுக்கு 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போதையஅனுபவித்து வரும் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை முடிவடைந்த பின்னர் இந்த சிறைத்தண்டனை நடைமுறைக்கு வரும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் நிஷ்சங்க பந்துல கருணாரத்ன, நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

குற்றவாளியான அஜித் பிரசன்ன, இனிவரும் காலங்களில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட மாட்டார் என நம்புவதாக நீதியரசர் நிஷ்சங்க பந்துல கருணாரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சிறைத்தண்டனையில் இருந்து விடுதலையாக செல்லும் தினத்தில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட கூடாது எனவும் நீதியரசர் எச்சரித்துள்ளார்.

கடந்த 2019 டிசம்பர் 06 மற்றும் 08 ஆம் திகதிகளில் வலையொளி அலைவரிசைகளில் பல நீதவான்களின் தீர்ப்புகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, பிரதிவாதி அஜித் பிரசன்னவுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய அஜித் பிரசன்ன, இனிமேல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எந்தக் கருத்தையும் வெளியிடப் போவதில்லை என உறுதியளித்துள்ளார்.

வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதியரசர்கள், நீதிமன்றத்தை அவமதித்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு அஜித் பிரசன்ன குற்றவாளி என தீர்மானித்தனர்.

இதனையடுத்து ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

related posts