சர்வதேச பொலிஸார் அல்லது INTERPOL ன அழைக்கப்படும் சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள 6,872 தப்பியோடியவர்களில் 07 பேர் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏழு பேரில், நான்கு பேர் இலங்கையில் ‘தேடப்படுபவர்கள்’ என்று பட்டியலிடப்பட்டுள்ளனர்.
ஏனைய மூன்று இலங்கையர்களுக்கு அவர்களின் பிரதேசங்களில் நடந்த குற்றங்களுக்கான கோரிக்கைகளின் அடிப்படையில் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்டர்போல் ரெட் நோட்டீஸ் என்பது, நாடுகடத்தப்படுதல், சரணடைதல் அல்லது அதுபோன்ற சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் ஒருவரைக் கண்டறிந்து, தற்காலிகமாக கைது செய்ய உலகெங்கிலும் உள்ள சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் கோருவதாகும்.
இதனடிப்படையில், இன்டர்போல் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தேடப்படும் நால்வர் கொஸ்கொட சுஜீ என்ற 38, நடராஜா சிவராஜா, 49, முனிசாமி தர்மசீலன், 50, மற்றும் விக்னராசா செல்வந்தன், 35 ஆகிய நால்வராவர்.
கொலை வழக்கு தொடர்பில் கொஸ்கொட சுஜீக்கும், மறைந்த அமைச்சர் லக்ஷ்மன் கதிரகாமரின் கொலைக்கு உதவிய நடராஜா சிவராஜாவுக்கும் இந்த சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மசீலன் இரண்டு கைக்குண்டுகள் மற்றும் 200 ரவைகளை வைத்திருந்ததற்காக தேடப்பட்டு வரும் நிலையில், செல்வந்தன் மீது திருட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மற்ற மூன்று இலங்கையர்கள் பற்றிய தகவல்களை இன்டர்போல் கண்டுபிடித்து வருகிறது.
அதன்படி, நவநீதன் கொலைச் சம்பவம் தொடர்பில் ருமேனியாவினால் தேடப்படும் வவுனியாவைச் சேர்ந்த குமாரசாமி, போலி நாணயத்தாள்கள் தொடர்பில் இந்தியாவினால் தேடப்படும் அலபொடகமவைச் சேர்ந்த 61 வயதான மொஹமட் பௌமி, கனடாவால் தேடப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் விஜயராஜா (41) ஆகியோர்களே தேடப்படுகின்றார்கள்.
இதேவேளை, மேலும் ஐந்து இலங்கையர்களுக்கு சர்வதேச பொலிஸார் மஞ்சள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
காணாமல் போனவர்கள், பெரும்பாலும் சிறார்களைக் கண்டறிவதற்கு அல்லது தங்களை அடையாளம் காண முடியாத நபர்களை அடையாளம் காண்பதற்கு மஞ்சள் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன.