டெல்லியில் அரசு அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை நீர்த்து போக செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதே போல் வருங்காலத்தில் மாநில அரசுகளின் அதிகாரங்களையும் மத்திய அரசு பறிக்கும் என அவர் கூறினார்.
அவசர சட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் கடந்த மே 23-ந்தேதியில் இருந்து, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அவசர சட்டத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறார்.
தொடர்ந்து, மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.