வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு கடல் நீரில் விளக்கு எரிக்கும் வைபவம் காலங்காலமாக இடம்பெற்று வருகின்றது.
இந்த ஆண்டு ஆடி குளிர்த்தி பொங்கலுக்காக ஜுன் 26 ஆம் திகதி முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடாத்தப்பட்டு நடுநிசி இரவு 12 மணியளவில் ஆலய பூசகர்கள் பெருங் கடலும் தொண்டமானாறு வாவியும் இணையும் இடத்திற்கு சென்று வெள்ளை துணியினால் வாய்கட்டப்பட்ட மண் குடத்தில் கடல் நீர் எடுத்து வரப்பட்டது.
இதனையடுத்து விசேட பூஜை வழிபாடுகள் நடாத்தி ஆலய மூலஸ்தானத்தில் வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (03) வரையான ஒரு வார காலத்திற்கு கடல் நீரில் விளக்கெரித்து பொங்கல் பொங்கும் சம்பிரதாயபூர்வ வைபவம் இடம் பெறவுள்ளது.
வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் குளிர்த்தி பொங்கல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.