மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண ‘டைட்டன்’ நீர்மூழ்கியில் சென்ற 5 கோடீசுவரர்கள், நீர்மூழ்கி வெடித்ததால் பலியானார்கள்.
அந்த நீர்மூழ்கியின் சிதைவுகளுடன் மனித உடல் பாகங்கள் என கருதப்படும் பகுதிகளும் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த 1912-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் கடலில் ‘டைட்டானிக்’ கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியது.
அதன் சிதைந்த பாகங்களை பார்க்கும் ஆர்வத்தில், 5 கோடீசுவரர்கள் கடந்த 18-ந் தேதி ஆழ்கடல் பயணம் மேற்கொண்டனர். ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனம் வடிவமைத்த ‘டைட்டன்’ நீர்மூழ்கியில் அவர்கள் பயணித்தனர்.
அவர்களை பற்றி 4 நாட்களாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. டைட்டானிக் கப்பல் அருகே நீர்மூழ்கி வெடித்து சிதறி 5 பேரும் பலியாகி விட்டதாக அதிகாரிகள் 22-ந் தேதி அறிவித்தனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து, ‘டைட்டன்’ நீர்மூழ்கி எப்படி வெடித்து சிதறியது என்பது தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் கனடா அரசு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க கடலோர காவல்படை, நீர்மூழ்கியின் சிதைந்த பகுதிகளை மீட்கும் பணியில் இறங்கியது.
இந்நிலையில், நீர்மூழ்கியின் உடைந்த பாகங்கள், ஆழ்கடலில் 3 ஆயிரத்து 810 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை கூறியுள்ளது. அந்த இடம், டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 488 மீட்டர் தூரத்தில் உள்ளது.