உத்தர பிரதேசத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 அடுக்கு வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகினர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது: திக்ரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. சிலிண்டர் வெடித்ததால் இரு அடுக்கு வீடு இடிந்ததில் சம்பவ இடத்திலேயே நிசார் அகமது (35), ரூபினா பனோ (32), ஷம்ஷத் (28), சாய்ருனிஷா (35), ஷாபாஸ் (14), நூரி சாபா (12), மெராஜ் (11), முகமது சோயப் (2) ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர் லக்னெளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். தடயவியல் துறையினரும் பல்வேறு மாதிரிகளை விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து
சேகரித்துள்ளனர். இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அறிய விசாரணை நடத்தி வருகிறோம் என்று காவல்துறையினர் கூறினர்.
முதல்வர் இரங்கல்: இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள அவர், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளார்.