அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னெடுத்துள்ள பேச்சின் அடுத்த சுற்றுப் பேச்சு விரைவில் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசியல் தீர்வு தொடர்பில் வெளிநாடுகளில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அடுத்த கட்டப் பேச்சு எப்போது நடைபெறும் என ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்
“பேச்சு விரைவில் நடக்கும். அது தொடர்பில் சந்தேகப்படத் தேவையில்லை. அரசியல் தீர்வில் உறுதியாக இருக்கின்றேன்.
வெளிநாடு சென்றமையால் திட்டமிட்டவாறு பேச்சு நடக்கவில்லை. சர்வதேச சமூகத்திடம் அரசியல் தீர்வு தொடர்பில் கருத்துரைத்துள்ளேன்.எனவே, அதைச் செயற்படுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை – அரசுடனான பேச்சு தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனைக் கேட்டபோது,
“ஜனாதிபதி ரணில் கூறிய திகதியில் பேச்சு நடக்கவில்லை. அடுத்த கட்டப் பேச்சு சம்பந்தமாக அறிவிக்கப்படவில்லை.
தொடர்ந்து இவ்வாறு விட்டுக்கொண்டிருக்க முடியாது. நாங்கள் தீர்க்கமான முடிவு எடுப்போம் என்று ஜனாதிபதியிடம் நேரடியாக கடைசி சந்திப்பில் தெரிவித்துவிட்டேன்.
விரைவில் ஒரு முடிவு எடுப்போம். ஒரு வாரத்தின் பின்னர் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்” என பதிலளித்துள்ளார்.