இத்தாலியில் தலைநகர் ரோமுக்கு அடுத்தபடியான பெரிய நகரமாக மிலன் விளங்குகிறது. இங்கு முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 200 முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இங்கு தங்களது அறைகளில் முதியவர்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் இந்த இல்லத்தின் ஒரு அறையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியது.
இதனையறிந்த முதியவர்கள் செய்வதறியாது திகைத்தனர். சிலர் தங்களது சக்கர நாற்காலிகளில் வேகமாக கீழே இறங்கினர். ஆனால் புகை மண்டலமாக காட்சியளித்ததால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தண்ணீரை பீய்ச்சியடித்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே முதியோர் இல்லத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனாலும் நள்ளிரவு நேரத்தில் அனைவரும் தூங்கி கொண்டிருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.