மாலைத்தீவிலிருந்து இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகம் நோக்கி, 87 மீற்றர் நீளமான கொள்கலன் தாங்கியை இழுத்துகொண்டு பயணித்த கப்பல் ஒன்று இலங்கைக் கடற் பரப்புக்குள் கரைதட்டியுள்ளதாக, இலங்கையின் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கையின் மன்னார் கடற்கரைப் பகுதியில் இந்த கப்பல் நேற்று கரைதட்டியுள்ளது.
மாலைத்தீவிலிருந்து தூத்துக்குடிக்குப் பயணித்துகொண்டிருந்த இந்த கப்பல் கடற் பரப்பில் நிலவிய கடும் காற்றுக் காரணமாக இலங்கையின் மன்னார் கடற் பரப்புக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த கப்பலின் 11 பணியாளர்களுக்கும் எந்தவிதமானப் பாதிப்புகளும் இல்லை என கூறும் இலங்கைக் கடற்படையின் பேச்சாளர், இந்த கப்பலை மீண்டும் கரையில் இருந்து இழுத்துச் செல்வதற்கு இந்தியாவிலிருந்து கப்பல் ஒன்று வந்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.
இதேவேளை, இலங்கையின் மன்னார் கடற்கரைப் பகுதியில் கரைத்தட்டியுள்ள இந்த கப்பலை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் வந்து செல்வதையும் அவதானிக்க முடிகிறது