Home இலங்கை அரசாங்கம் திசை மாறி பயணிக்கின்றது – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

அரசாங்கம் திசை மாறி பயணிக்கின்றது – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

by Jey

” நாட்டை பாதுகாப்போம் என அறிவிப்புவிடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது திசைமாறி பயணித்துக்கொண்டிருக்கின்றனர். நாட்டு வளங்கள் விற்கப்படுகின்றன. எனவே, நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய திசையில் பயணிப்பதை அரசு உடன் நிறுத்த வேண்டும்.” – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டை பாதுகாப்போம் என அறிவித்து, ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்ற குழுவினர், நாட்டை சீரழிக்கும் திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

எமது மனங்களுக்குள் ஏற்பட்டிருந்த நம்பிக்கை சிதைவடையும் சூழ்நிலை உருவாகியிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். இந்நாடு எத்திசையை நோக்கி பயணிக்கின்றது, யார் நிர்வாகம் நடந்துவது, யார் தீர்மானம் எடுப்பது என்பன உள்ளிட்ட விடயங்களிலும் நம்பகத்தன்மையற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்வாறானதொரு திசையில் பயணிப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நாட்டு வளங்களை இலகுவில் விற்பனை செய்யமுடியும். அவ்வாறு வளங்களை விற்பது அபிவிருத்தி கிடையாது. எமது நாட்டுக்கென ஆத்ம கௌரவம், ஆதம் நம்பிக்கை உள்ளது. இதனை பாதுகாக்க வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்.

எம்சிசி உடன்படிக்கைக்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டபோது எம்முடன் இணைந்து அதற்கு எதிராக குரல் கொடுத்த தற்போதைய ஆட்சியாளர்கள், இன்று அச்செயலைவிடவும் பாரதூரமான விடயங்களை முன்னெடுப்பதை காணமுடிகின்றது.

அதேவேளை, கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் எமது நாட்டு மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துறைமுகம் சார் அமைச்சரும் அவரின் பணியாட் தொகுதியினரும் இச்சம்பவம் குறித்து எமக்கு இன்னும் தெளிவான பதிலை வழங்கவில்லை. கப்பலிலில் தீப்பரவல் ஆரம்பித்தபோதே அதனை ஆழ்கடலுக்கு கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கடல் வளம் அழிவடைந்துள்ளது. கடல்வாள் உயிரினங்களும் அழிவடைந்துவருகின்றன.

இக்கப்பல் கடலில் மூழ்கினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும். அதற்கு இடமளிக்க முடியாது. கப்பல் நிறுவனத்துக்கு எதிராக மீனவர்கள் வழக்கு தொடுக்க வேண்டும். மீனவர்களைத்திரட்டி அதற்கான தலைமைத்துவத்தை நான் வழங்குவேன். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு மட்டும்போதாது. உரிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்ட நஷ்டஈடு வழங்கவேண்டும். மீனவர்கள் தொழிலை மீள ஆரம்பிப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை விரைவில் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.” – என்றார்.

related posts