நாட்டின் வடமாநிலங்களில் பருவமழை பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும்
பாதித்து உள்ளது.
இந்த நிலையில், வடமாநிலங்களில் நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான சம்பவங்களால் கடந்த 2 நாட்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்து உள்ளது.
இமாசல பிரதேசத்தில் மண்டி, கிண்ணார் மற்றும் லஹால்-ஸ்பிடி நகரங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளும் விடப்பட்டு உள்ளன.
டெல்லியில் யமுனா ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ள நீர் செல்கிறது. இதனால், நீர்மட்டம் 206.24 மீட்டராக உள்ளது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்து உள்ளது.
பஞ்சாப் மற்றும் அரியானாவிலும் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை பெய்து உள்ளது. இதில் 9 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். இதன் எதிரொலியாக வருகிற 13-ந்தேதி வரை பள்ளிகளை மூடும்படி பஞ்சாப் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு காணப்படுகின்றன. கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் மூழ்கியும், அடித்து செல்லப்படும் காட்சிகளும் வெளிவந்து உள்ளன.
இதனால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு வேண்டுகோளாக கேட்டு கொண்டு உள்ளது.