கனடாவில் புதுவாழ்வு கிடைக்கும் என நம்பி சொந்த நாட்டை விட்டு வந்த பலர், தாங்கள் சாலையோரம் படுத்து உறங்கவேண்டி வரும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்கள்.
உகாண்டாவிலிருந்து அரசியல் அகதியாக கனடாவுக்கு வந்த ஒருவர், சொந்த நாட்டைவிட்டு வெளியேறியாகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலன்றி யாரும் சொந்த நாட்டை விட்டு வேறொரு நாட்டுக்கு வரமாட்டார்கள் என்கிறார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நான் கனடாவை அடைந்தபோது என் வருகை விரும்பப்படவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.
நான் இரண்டு வாரங்களாக கொட்டும் மழையில் சாலையோரமாக படுத்து உறங்கிவருகிறேன் என்று கூறும் அவர், நான் கனடாவில் சாலையில் படுத்து உறங்குவேன் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு கூட்டம் மக்கள் புகலிடம் கோரி கனடா வந்த நிலையில், ரொரன்றோவில், புகலிடக்கோரிக்கை மையங்களில் இடமில்லாததால் சாலையோரம் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ரொரன்றோவின் மேயர், தான் பல்வேறு மட்டங்களில் அரசிடம் இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர மற்றும் உடனடியான நடவடிக்கைகள் எடுக்கக் கோரி பேசிவருவதாக தெரிவித்துள்ளார்.
தொண்டு நிறுவனங்கள் அந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அடைப்படை உதவிகளை மேற்கொண்டு வருகின்றன. அரசு இந்த பிரச்சினைகளை தீர்க்க முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொண்டு நிறுவனங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.