ஊக்கமருந்து பரிசோதனையில் இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் தோல்வியடைந்துள்ளதால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தில்லியைச் சேர்ந்த சுமித் மாலிக், சோஃபியாவில் நடைபெற்ற உலக ஒலிம்பிக்ஸ் தகுதிச்சுற்றுப் போட்டியில் 125 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றார். (காயம் காரணமாக சோஃபியா போட்டியின் இறுதிச்சுற்றிலிருந்து விலகினார்.) ரவி தாஹியா (57 கிலோ), பஜ்ரங் புனியா (65 கிலோ), தீபக் புனியா (86 கிலோ) ஆகிய இந்திய மல்யுத்த வீரர்களும் ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றார்கள்.
இந்நிலையில் யுனைடெட் உலக மல்யுத்த அமைப்பு நடத்திய ஊக்கமருந்து பரிசோதனையில் சுமித் மாலிக் தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏ மாதிரி பிரிவு சோதனையில் தோல்வியடைந்த சுமித் மாலிக், உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (வடா) நடத்தும் பி மாதிரி பிரிவு சோதனையிலும் தோல்வியடைந்தால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும். மேலும் அவர் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடவும் தடை விதிக்கப்படும்.