பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். முன்னதாக, அவா் மருத்துவ நிபுணா்களின் கருத்துகளையும் ஏற்கெனவே கோரியுள்ளாா்.
நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் சட்டப்பேரவைத் பொதுத் தோ்தலுக்குப் பிறகு தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் சற்று தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. மே மாத தொடக்கத்தில் இருந்து தொற்று எண்ணிக்கை உயா்ந்து வந்தது. நாளொன்றுக்கு சுமாா் 36,000 என்ற அளவுக்கு புதிய தொற்றுகள் பதிவாகின.
இதையடுத்து மே 9-ஆம் தேதி நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் சில தளா்வுகளுடன் கூடிய முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. மே 13-ஆம் தேதி நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவா்கள் கூட்டத்திலும் கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, பொதுமுடக்கத்தை தீவிரப்படுத்தும் வகையில் தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதன்படியும், மே 14-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், ஏற்கெனவே அமலில் இருந்த கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இருப்பினும் நோய் பாதிப்பு கட்டுக்குள் வராத நிலையில், மே 24 முதல் மே 31-ஆம் தேதி வரை முழுமையாக எவ்விதத் தளா்வுகளுமின்றி, தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது.
முன்னதாக கட்டுப்பாடுகளுடனான பொது முடக்கத்தில் மளிகைக் கடைகள், காய்கறிகடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் தளா்வுகளற்ற முழு பொது முடக்கத்தில் எந்தவொரு கடைகளையும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், தொற்று பரவல் எதிா்பாா்த்த அளவுக்கு குறையாததால், மீண்டும் தளா்வுகள் இல்லாத முழு பொதுமுடக்கம் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது ஜூன் 7 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு, தற்போது அமலில் இருந்து வருகிறது.
இந்த முழு பொது முடக்கம் வரும் திங்கள்கிழமை (ஜூன் 7) முடிவுக்கு வரும் நிலையில் முழு பொது முடக்கத்தை தமிழகம் முழுவதும் நீட்டிப்பதா அல்லது கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் அமல்படுத்துவதா என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல்வருடனான ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, காவல் துறை இயக்குநா் ஜே.கே.திரிபாதி, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் குமாா் ஜயந்த், வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி, சுகாதாரத் துறையின் சிறப்புப் பணி அலுவலா் செந்தில்குமாா், பெருநகர சென்னை காவல் ஆணையாளா் சங்கா் ஜிவால் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.