மூதூரில் அக்ஷன் பாம் நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் கடந்துள்ளன.
2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் நடந்த படுகொலைச் சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (04.08.2023) 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
எனினும் தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி 17 வருடங்களாகியும் இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள் மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.
இதன்போது 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது.
குறித்த படுகொலைச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.