கொரோனா வைரஸ் முதலில் எங்கு தோன்றியது என்பது குறித்து, உலக சுகாதார நிறுவன நிபுணர்களை அழைத்து, அமெரிக்கா தெரிந்து கொள்ள வேண்டும்’ என, சீனா தெரிவித்துஉள்ளது.
அமெரிக்காவின் தொற்று நோய் தடுப்பு இயக்குனர் அந்தோணி பாசி, சீனாவின் வூஹான் நகர ஆய்வுக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என, நம்புவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இது தொடர்பான ரகசிய மின்னஞ்சல்கள் சமீபத்தில் ஊடகங்களில் வெளியாயின.
இதையடுத்து, அந்தோணி பாசி, தன் கருத்துக்கு வலு சேர்க்க, ‘முதன் முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட வூஹான் ஆய்வுக் கூடத்தைச் சேர்ந்த ஒன்பது பேரின் மருத்துவ அறிக்கைகளை சீனா வெளியிட வேண்டும்; அதில் பாதிப்பு எப்படி வந்தது என தெரியும்’ என, பேட்டி அளித்திருந்தார்.
இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது:கடந்த 2019, டிச., 30க்கு முன் கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை என, வூஹான் வைரஸ் ஆய்வகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.உலக சுகாதார நிறுவனமும், சீனாவில் கொரோனா தோன்றியதை உறுதி செய்யவில்லை.
அதனால், உலக சுகாதார நிறுவன நிபுணர்களை அழைத்து, கொரோனா தோற்றம் குறித்து அமெரிக்கா அறிந்து கொள்ள வேண்டும். அந்த விபரங்களை, அமெரிக்கா அதன், ‘போர்ட் டெட்ரிக் லேப்’ உட்பட, உலகளவில் உள்ள 200க்கும் மேற்பட்ட உயிரி பரிசோதனைக் கூடங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.