ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள அண்மைய நிலவர அறிக்கையின்படி, சுமார் 3.9 மில்லியன் இலங்கையர்கள் மிதமான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என தெரியவந்துள்ளது.
சுமார் 2.9 மில்லியன் குழந்தைகளுக்கு உயிர்காக்கும் ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி, தண்ணீர் மற்றும் சுகாதாரம், மற்றும் சமூகப் பாதுகாப்பு சேவைகளைப் பெற மனிதாபிமான உதவி தேவை என்று அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த மே மாத நிலவரப்படி சுமார் 3.9 மில்லியன் மக்கள் மிதமான உணவுப் பாதுகாப்பற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்டத் துறை சமூகங்கள் மிக உயர்ந்த அளவிலான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சமுர்த்தி அல்லது ஊனமுற்றோர் நலன்கள் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் அதிகம் தங்கியுள்ளவர்கள் உள்ளடங்குகின்றனர்.
நாட்டில் வெளிப்படையான பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பட்ட உணவுப் பாதுகாப்பு இருப்பதாக தெரிகிறது.
எனினும் கடந்த மே மாதத்தில் 48 சதவீத மக்கள், சேமிப்பைத் திரும்பப் பெறுதல், பணம் கடன் வாங்குதல் மற்றும் கடனில் உணவை வாங்குதல் போன்ற வாழ்வாதார அடிப்படையிலான சமாளிப்பு உத்திகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
26 சதவீத குடும்பங்கள் அவசரகால அல்லது நெருக்கடி நிலை வாழ்வாதாரத்தை சமாளிக்கும் உத்திகளைப் பயன்படுத்துகின்றன.
உற்பத்தி சொத்துக்களை விற்பது, கல்விச் செலவுகளைக் குறைத்தல், குழந்தைகளை பாடசாலையில் இருந்து முழுவதுமாக விலக்குதல் மற்றும் நிலத்தை விற்பது ஆகியவை இதில் அடங்குகின்றன.
வரட்சி நிலைமைகள் எதிர்வரும் பெரும்போக விவசாயப் பருவத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.