தி.மு.க. தென்மண்டலத்தில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று ராமநாதபுரம் பேராவூரில் நடந்தது. தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:- நமக்கு எதிராக அவதூறு, பொய் பிரசாரம் செய்யும் சிறுநரிக்கூட்டம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்கள் சிறப்பான பரப்புரை களமாக மாறி உள்ளது. எனவே, அனைவரும் சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்க வேண்டும். அதனை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
அ.தி.மு.க., பா.ஜ.க. செய்வதை போல பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். நமது சாதனைகளை மட்டும் சொன்னால் போதுமானது.
நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி முழுமையாக வெற்றி பெற வேண்டும். தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க. நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டது. மீண்டும் ஒரு முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.
பதவிக்கு வரும் முன் மோடி பல வாக்குறுதிகளை கொடுத்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி கருப்பு பணத்தை ஒழித்து ஆளுக்கு ரூ.15 லட்சம் கொடுத்தார்களா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுத்தாரா? இதில் ராமநாதபுரத்தில் அவர் போட்டியிட போகிறார் என்கின்றனர்.
ராமேசுவரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றுவோம் என்றார். பாதாள சாக்கடை பணிகளை தவிர எதுவும் நடக்கவில்லை. அதையும் அ.தி.மு.க. ஆட்சியில் முழுமையாக செய்யவில்லை. புயலால் அழிந்து போன ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை திட்டத்தை கொண்டு வருவோம் என்றார்.
இதுவரை எதுவும் நடக்கவில்லை. மோடி சுட்ட பல வடைகளில் இந்த வடையும் ஒன்று. மத்திய அமைச்சராக அருண்ஜெட்லி இருந்தபோது சொன்ன மதுரை எய்ம்ஸ் திட்டம் செங்கலுடன் நின்றுவிட்டது. 9 வருடங்கள் கழித்து தற்போதுதான் டெண்டர் விட்டுள்ளனர். இதுவும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நாடகமா? என்பது தெரியவில்லை.