கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ஓவியர் இளையராஜா(43) கரோனா தொற்றால் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.
அவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்படவே சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
மிகவும் தத்ரூபமாக ஓவியங்கள் வரைவதில் வல்லவரான அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர்இளையராஜாவின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்! கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்!’ என்று பதிவிட்டுள்ளார்.