நாடு முழுவதும் கரோனா 2-ம் அலையின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியது:
“மற்ற நாடுகள் போல இந்தியாவும் கடினமான சூழலில் போராடி வருகிறது. இந்தப் போராட்டத்தில் நமக்குப் பிரியமான ஏராளமானோரை இழந்துள்ளோம்.
100 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப் பெரிய தொற்று பாதிப்பு இது.
படிக்க: மாநிலங்களுக்கு இலவசமாகவே தடுப்பூசி: பிரதமர் மோடி
ஏப்ரல், மே மாதங்களிலிருந்து ஆக்ஸிஜன் தேவை கடுமையாக அதிகரித்தது. ஆக்ஸிஜனைக் கொண்டு வர விமானம், ரயில் என அனைத்துப் போக்குவரத்து சேவைகளும் பயன்படுத்தப்பட்டன. நாட்டின் எந்த மூலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டாலும் அது நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆக்ஸிஜன் உற்பத்தியும் இதுவரை இல்லாத வகையில் கடுமையாக அதிகரிக்கப்பட்டன.
அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி தேவை ஏற்பட்டதையடுத்து, தடுப்பூசி உற்பத்தியை இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளோம். இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி இல்லையென்றால் நிலைமையை யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே ஆயுதம்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. கரோனா தடுப்பூசி உற்பத்தியில் எந்த நாட்டைக் காட்டிலும் நாம் பின்தங்கிய நிலையில் இல்லை. நம் விஞ்ஞானிகள் இதை நிரூபித்துக் காட்டிவிட்டார்கள்.
தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கியது.