மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க 44 கோடி கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை வாங்குவதற்கான கொள்முதல் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
நாட்டிலுள்ள 18 வயதைக் கடந்த அனைவருக்கும் ஜூன் 21-ஆம் தேதி முதல் மத்திய அரசே இலவசமாக தடுப்பூசியை செலுத்தவுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்காக 25 கோடி கோவிஷீல்டு மற்றும் 19 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் நடப்பாண்டு டிசம்பர் மாதம் வரை கிடைக்கும் எனவும், 30 கோடி பயோலாஜிக்கல்-இ தடுப்பூசியும் செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவதற்காக சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு 30 சதவிகிதம் முன்பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.