கனடாவில் வாழும் இந்து மதத்தவர்களை நாட்டை விட்டு வெளியேறும்படி காலிஸ்தான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் சீக்கியர்கள் ஒன்றிணைந்து காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என ஆயுதப் போராட்டம் நடத்தி தோல்வி அடைந்தார்கள்.
இத் தோல்வியின் பின்பு இந்தியாவை விட்டு வெளியேறிய சீக்கியர்கள் லட்சக்கணக்கானோர் கனடாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.
தற்போது கனடாவின் மொத்த ஜனத்தொகையில் சீக்கியர்கள் 2.1 சதவீதம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
இதனால் கனடா அரசியலிலும் சீக்கியர்கள் பங்களிப்பு அதிகமாகி விட்டது.
இந்நிலையில் இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகளை கனடா ஒப்படைக்காத வேளையில், தேடப்படும் பயங்கரவாதிகள் சிலர் கனடாவில் கொல்லப்பட்டனர்.
கனடாவில் நிகழ்ந்த இந்த கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம் சாட்டியதோடு இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியதை அடுத்து இதை கண்டித்த இந்தியா கனடாவின் தூதரக அதிகாரியை வெளியேற்றியது.
இதன் காரணமாக இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு என்ற காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம், கனடாவில் வாழும் இந்துக்களை மிரட்டி இருக்கிறது.
இதுதொடர்பாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் வெளியிட்ட அறிவிப்பில்,
கனடாவில் இருந்து இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் வெளியேறி இந்தியாவுக்கு செல்ல வேண்டும். நீங்கள் இந்தியாவை மட்டும் ஆதரிக்கவில்லை.
காலிஸ்தான் தனிநாடு கோருகிறவர்கள் மீதான அடக்குமுறையையும் ஆதரிக்கிறீர்கள். ஆகையால் கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு செல்லுங்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் படிப்புக்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் கனடா சென்ற பல லட்சம் இந்தியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.