இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இலங்கையிலிருந்து தங்கம் படகில் கடத்தி வரப்பட இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றுமுன்தினம் (23.10.2023) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் தூரத்தில் இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த 4 கடற்றொழில் படகுகளையும் அதிலிருந்த 8 இலங்கை நபர்களிடம் இந்திய கடலோர காவல் படையினர் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் சந்தேகத்திற்கிடமாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபம் அழைத்து வந்து கொண்டிருந்த போது நடுக்கடலில் மண்டபம் மரைக்காயர் பட்டணத்தைச் சேர்ந்த நாட்டு படகை பிடித்து சோதனை செய்த போது படகில் 35 மூட்டைகளில் 594 கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்துள்ளன.
படகையும் அதிலிருந்த நால்வர் என மொத்தமாக 12 பேரை கைது செய்து மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அழைத்து சென்று அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் மூட்டைகளை புத்தளம் மற்றும் கல்பிட்டிக்கு கடத்திச் சென்ற போது பிடிபட்டதாக ஒப்புக்கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடத்தல் பொருட்களை பெற்று செல்வதற்காக 4 படகுகளில் இலங்கை நபர்கள் காத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து தமிழகத்தை சேர்ந்த நால்வரையும் கடத்தல் பொருட்களுடன் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டனர்.