Home கனடா கனேடிய நகரம் ஒன்றில், துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

கனேடிய நகரம் ஒன்றில், துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

by Jey

கனேடிய நகரம் ஒன்றில், 44 வயது நபர் ஒருவர், குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை இரவு 10.20 மணியளவில், ஒன்ராறியோவின் Sault Ste. Marie நகரிலுள்ள Tancred தெருவில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளதாக பொலிசாருக்கு அழைப்பு வரவே, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

அப்போது, அந்த வீட்டிற்குள் 41 வயது நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடப்பதை பொலிசார் கண்டுள்ளனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் துப்பாக்கியால் சுட்ட நபர் தப்பியோடி விட்டார்.

பொலிசார் அங்கு விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், 10 நிமிடங்கள் கழித்து, அதே பகுதியில், மூன்று கிலோமீற்றர் தொலைவிலுள்ள வேறொரு வீட்டிற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளதாக பொலிசாருக்கு அழைப்பு வந்துள்ளது.

உடனடியாக பொலிசார் அங்கு விரைய, அங்கு 45 வயது நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதைக் கண்டு அவரை பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அது ஒரு பெண்ணாக இருக்கலாம் என கருதப்படுகிறது. காரணம், இது கணவன் மனைவி சண்டையில் நடந்த கொலைகள் என பொலிசார் தெரிவித்துள்ளதுதான்.

பொலிசார் அந்த வீட்டை சோதனையிட, வீட்டிற்குள் முறையே 6, 7 மற்றும் 12 வயதுடைய மூன்று பிள்ளைகள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடப்பதைக் கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கூடவே, அவர்களை துப்பாக்கியால் சுட்ட 44 வயது நபரும், தன்னைத்தான் சுட்டுக்கொண்டு உயிரிழந்து கிடந்துள்ளார்.

இரண்டு வீடுகளில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடுகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரிவித்துள்ள பொலிசார், அவை கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சினையால் நிகழ்ந்த சம்பவங்கள் என்று கூறியுள்ளனர்.

குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ள விடயம் Sault Ste. Marie நகரை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ள நிலையில், நகர மேயரான Matthew Shoemakerம், ஒன்ராறியோ மாகாண பிரீமியரான Doug Fordம் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள். பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

 

 

 

 

related posts