ஐந்து வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் இலங்கையிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எவ்வித சிரமமும் பிரச்சினையும் இன்றி வாக்களிக்க தனியான அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, முன்னோடித் திட்டமாக 10 மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 500 பேர் வீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதற்கான 5000 அடையாள அட்டைகள் இந்த வருடத்திற்குள் தயாராகி வருவதாக ரத்நாயக்க தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நேற்று (06) இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை தயாரிக்கும் நிகழ்ச்சியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
” 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இலங்கையில் கிட்டத்தட்ட 16 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகவும், 2023ஆம் ஆண்டளவில் அந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் இருப்பதால் பல குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகளின் பெயர்களை வாக்குப் பதிவில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதில்லை.
தேர்தல் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள அடையாள அட்டைகள் மூலம் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க முடியும்.
எனவே, விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் எவரும் இந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த அடையாள அட்டையை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.
முதல் சுற்றில் முழு ஊனமுற்றவர்களுக்கு அட்டை வழங்கப்படும்.” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சர்வோதயா நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் பணிபுரியும் ஒரு பெரிய அமைப்பு இலங்கையில் பூரண ஊனமுற்றோருக்கான அடையாள அட்டைகளை தயாரிப்பதற்கு நிதியுதவி வழங்குவதாகவும், 2024ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் திணைக்களத்தினால் தேவையான நிதி ஒதுக்கப்படும் என்றும் ரத்நாயக்க குறிப்பிட்டார்.