வடமாகாணத்தில் ஊழியர் சேமலாப நிதியம் பெறும் பெற்றோர்களின் பிள்ளைகள், க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி உயர்கல்வியை தொடரமுடியாது இருப்பின் அவர்கள் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் கற்கை நெறியை தொடர ரூபாய் 25,000 வழங்கப்படும் என வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
இன்று காலை சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் மனைப்பொருளியல் கற்கைநெறியின் ஆடை வடிவமைப்பு தேசிய தொழில் தகைமையினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஒரு காலத்தில் நாங்களும் பட்டதாரியாக சான்றிதழ் பெறவேண்டும் என நினைத்துள்ளோம். பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறும் சூழலானது உங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினையின் நிமித்தம் கிடைக்கப்பெறாது போயிருக்கும்.
நீங்கள் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த தேசிய தொழில்தகைமை சான்றிதழை பல்கலைக்கழக பட்டத்திற்கு சமனாக காட்டமுடியும்.
இந்த தகைமையை உங்களுக்கு ஏற்படுத்தி தந்தமைக்காக, கிராமிய அபிவிருத்தி திணைக்களத்திற்கும் நைற்றா நிறுவனத்திற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேசிய தொழில்தகைமையினை அதன் நான்காம் தரத்துடன் நிறுத்திவிடாது அதன் ஏழாம் தரம் வரை சென்று நீங்கள் பட்டம் ஒன்றினை பெற்று கொள்ளலாம்.
நீங்கள் தேசிய தொழில் தகைமையின் 7 ஆம் தரத்தினை பெற்றால் நீங்கள் அரசாங்கத்தின் உயர்பதவிகளை வகிக்கலாம்.
ஆகவே, அடுத்த சந்ததியாகிய நீங்கள் உங்களுக்கான முன்னேற்றம் குறித்த கனவினை உருவாக்க வேண்டும்.
இன்று உங்களுக்கான வாய்ப்பினை கிராமிய அபிவிருத்தி திணைக்களம் ஏற்படுத்தி தந்திருக்கின்றது. ஆகவே இதனை தொடர்வது உங்கள் கடமையாகும்.
இந்த சான்றிதழை வைத்துக்கொண்டு நீங்கள் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம். தற்பொழுது உண்மையிலேயே எத்தனையோ பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு கல்விதகைமை இருக்கின்றது ஆனால் தொழில்தகைமை இருப்பதில்லை. ஆனால் உங்களுக்கு இப்பொழுது சான்றிதழுடன் தொழில்தகைமையும் உள்ளது.
அரச சேவையை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பம் கோரியுள்ளோம். வெற்றிடத்தினை விட 25 வீதத்திற்கும் மேலான விண்ணப்பம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆகவே நீங்கள் ஏழாவது தரத்தினை சித்திபெற்ற பின்னர் அரச பணிக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் இந்த செய்திகளை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லவேண்டும்.
7000 இற்கும் மேற்பட்டோர் உயர்தர பரீட்சையுடன் கல்வியை இடைநிறுத்துகின்றார்கள். இதுவரை 1400 இளைஞர் யுவதிகளுக்கு தேசிய தொழில்தகைமை சான்றிதழை வழங்கியுள்ளோம்.
எனவே சாதாரண தர சித்தி உயர்தர சித்தி பெற்று பல்கலைக்கழகம் போக முடியாவிட்டாலூம், அந்த கனவினை நீங்கள் தேசிய தொழில்தகைமை சான்றிதழின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்