இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி இஸ்ரேல்–ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கட்டார் நேற்றைய தினம் அறிவித்தது.
இந்த போர் நிறுத்தத்தின் காரணமாக ஹமாஸ் அதிகமான பிணைக் கைதிகளை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் ஹமாஸ் 69 பிணைக் கைதிகளை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தநிலையில், நேற்றைய தினம் மேலும் இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பத்து பிணைக் கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் சண்டை நிறுத்தத்தை நீடிக்க விரும்புவதாக முன்னதாக இஸ்ரேல் கூறியிருந்தது.
இந்த நிலையில் “காஸா வட்டாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் மேலும் இரண்டு நாள் போரை நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது,” என்று கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் சமூக ஊடகமான எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை ஹமாஸ் தரப்பினர் உறுதிப்படுத்தியிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் இஸ்ரேல் இதுவரையில் எவ்வித கருத்தும் தெரிவிக்காத நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் பேச்சாளர் இரண்டு நாள் போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.